விவசாயிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கும் திட்டத்தில், பாஜக-வினர் தங்களின் உறவினர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 826 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் ஆயிரத்து 290 ஆக உயர்ந்தது. இதுவே கடந்த 2016 பிப்ரவரி 1-ல் இருந்து 2017 பிப்ரவரி வரையிலான காலத்தில் ஆயிரத்து 982 ஆக அதிகரித்தது.
2017-ஆம் ஆண்டு கணக்கின்படி, மத்தியப் பிரதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணப் பிரிவு தெரிவித்தது.
இதனால் நெருக்கடிக்கு உள்ளான மத்தியப்பிரதேச பாஜக அரசானது, விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி, தீவிர ஆலோசனை நடத்தி, இறுதியில் விவசாயிகளை பயிற்சிக்காக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்வது என்ற முடிவை எடுத்தது.
ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பும் செய்தது. பின்னர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக 30 விவசாயிகளைக் கொண்ட பட்டியலையும் இறுதி செய்தது. தென்னாப்பிரிக்கா செல்வதற்கும் 18 விவசாயிகள் விண்ணப்பித்தனர்.
இதுபோன்ற திட்டங்களால் விவசாயிகள் பெருமளவில் பலனடைவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் என்ற பட்டியலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகளுக்கான நிதியை பயன்படுத்தி, பாஜக-வினரை வெளிநாட்டு சுற்றுலா அனுப்புவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்விஷயத்தில் மிகப்பெரும் மோசடி நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.