தேமுதிகவோடு கூட்டணிப் பேச்சு முடிவாகாததால் கடும் கோபத்தில் இருக்கிறது டெல்லி பிஜேபி. எப்படியாவது அவர்களை வழிக்குக் கொண்டு வந்துவிடுங்கள் என தேசியத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
நேற்று பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தையிலும் பிரேமலதா பிடிகொடுக்கவில்லை. இதைப் பற்றிப் பேசும்போது, 2014 தேர்தலில் இருந்து இப்போது வரையில் உங்களோடுதான் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். எடப்பாடி பக்கம் நாங்கள் எட்டியே பார்க்கவில்லை.
அந்தக் கோபத்தில் எங்களுக்கு 4 சீட் என அவர் பேசுகிறார். அந்தளவுக்கு நாங்கள் கீழிறங்கிப் போக மாட்டோம். பாமகவைவிட நாங்கள் எந்த வகையில் குறைந்துவிட்டோம். எங்களுக்கு ராஜ்யசபா ஒதுக்கினால் என்ன எனக் கேட்டுள்ளனர்.
இதற்குப் பதில் கொடுத்த கோயல், உங்கள் முடிவை சீக்கிரம் சொல்லுங்கள் எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அதிமுக தரப்பு, ' இந்தக் கூட்டணியில் நின்று வெற்றி பெறுவோம் எனப் பேசுங்கள், தோற்போம் என்பது நினைவில் இருப்பதால்தான் ராஜ்யசபா கேட்கிறார்களா' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளது.
இந்த டிமாண்டில் வைட்டமின் ப பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார்கள். அதிலும் விஜயகாந்தின் உடல்நிலையை முன்வைத்தும் பேசியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் செலவுக்கு வழியில்லாமல் இருக்கிறோம். எங்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டால், நாங்கள் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம் எனக் கூறியிருக்கிறார்களாம்.
பிரேமலதா-சுதீஷ் ஆட்டத்தால் ஆடிப்போயிருக்கிறார்கள் தேமுதிகவில் உள்ள விஜயகாந்த் விசுவாசிகள்.