நீலகிரி மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றார் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா. முதல்முறை போட்டியிட்டபோதே மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி நீலகிரி மலை முழுவதும் தன்னுடைய விசுவாசிகளை அதிகப்படுத்திவிட்டார்.
இதனால் அடுத்தமுறை தேர்தலில் நின்றபோது, களவேலை செய்வது எளிதான பணியாக இருந்தது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான போதும், நீலகிரி தொகுதிக்குச் சென்றதை அப்பகுதி உடன்பிறப்புகள் மறக்கவில்லை. இந்தமுறை அவர் நீலகிரியில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும், நீலகிரி கட்சிக்காரர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதைப் பற்றிப் பேசும் அவர்கள், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் அறிவாலய பணிகளை கவனிப்பதில் சுணக்கம் ஏற்படுவதாக நினைக்கிறார் ஆ.ராசா. சென்னையில் இருந்து அடிக்கடி கொங்கு மண்டலத்துக்கு வந்து செல்வதிலும் பயண நேரம் அதிகமாகிறது. தலைமைக் கழகத்தில் முகாமிட்டு பணிகளைச் செய்வதன் மூலம் கட்சிக்குள் அடுத்தகட்ட உயர்வுக்கு அடித்தளம் போட நினைக்கிறார்.
இதன் காரணமாக, காஞ்சிபுரத்தில் போட்டியிட்டால் நல்லது என நினைக்கிறார். காஞ்சியில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் நேரமும் குறைவு என்பதால் இப்படியொரு முடிவில் அவர் இருக்கிறார். தங்களுக்கு சீட் வேண்டும் எனக் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் கொடுக்காதபட்சத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் ஆ.ராசா களமிறங்கலாம்' என்கிறார்கள்.