உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை மிரட்டும் கூட்டணிக் கட்சி!

Upset UP Ally threatens to contest independantly

by எஸ். எம். கணபதி, Apr 17, 2019, 09:48 AM IST

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணிக் கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகமான தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும்.

இம்மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் திடீரென கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்றன.

இந்த தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்வதால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இம்மாநிலத்தில் உள்ள வாராணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யாரை நிறுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், பிரியங்கா காந்தி, ‘‘மோடியை எதிர்த்து நானே போட்டியிடத் தயார்’’ என்று பேட்டி கொடுத்து மோடிக்கே வயிற்றில் புளியை கரைத்து விட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுகேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக திடீரென மிரட்டல் விடுத்துள்ளது. உ.பி., பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராஜ்பார் ஜாதியினர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகள் உ.பி.யில் சில பகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் இந்த சுகேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வென்றது. இந்த கட்சியின் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பார், தற்போது மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக உள்ளார். மக்களவைத் தேர்தலில் இவரது கட்சிக்கு கேட்ட தொகுதிகளை பா.ஜ.க. தர மறுத்து விட்டது. மேலும், ராஜ்பார் இனத்தவர் அதிகமாக வசிக்கும் பிரதமரின் வாரணாசி, ராஜ்நாத்சிங்கின் லக்னோ உள்பட 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்து விட்டது.

இதனால் கோபமடைந்த ஓம்பிரகாஷ் ராஜ்பார், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் கிழக்கு உ.பி.யில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்துள்ளார். அப்படி அவரது கட்சி தனித்து போட்டியிட்டால், அது பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய வாக்குகளை பிரித்து விடும். இதனால், பிரதமர் தொகுதியில் கூட நெருக்கடி ஏற்படும். எனவே, அவரை சமாதானப்படுத்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா முயற்சித்து வருகிறார். இதில் ஓம் பிரகாஷ் சமாதானமாகி விடுவாரா? அல்லது மிரட்டியபடி கூட்டணியில் இருந்து வெளியேறுவாரா என்பது ஓரிரு நாளில் தெரியும்.

 

'வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு தாருங்கள்' மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

You'r reading உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை மிரட்டும் கூட்டணிக் கட்சி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை