மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப குறைபாடு இருப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கேரளா, கோவா, கர்நாடகம், மராட்டியம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஓடிசா, தாத்ரா-நாகர்ஹவேலி மற்றும் டாமன் டையூ உள்ளிட்ட இடங்களில் 116 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் 20 தொகுதிகளில் காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.
கேரளாவில் மொத்தம் 25 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதோடு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்த முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைப் பதிவு செய்தார். கண்ணூர் மாவட்டம் ஆர்.சி அமலா பள்ளியில் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‘மின்னணு வாக்கு இயந்திரத்தில் பல்வேறு கோளாறுகள் உள்ளன. இதனைத் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருக்கிறது. நான் வாக்களிக்கும் போது கூட மின்னணு இயந்திரத்தில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை கண்டேன்’ எனத் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டிப் பேசினார்.
இதனிடையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக மாநிலம் முழுவதும் புகார்கள் வந்த வண்ணமாக உள்ளன.