தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், குச்சனூரில் பிரபலமான சனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திற்குள்ளேயே அன்னபூரணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நிதியுதவி செய்திருக்கின்றனர். இதனால், நேற்று அங்கு திறக்கப்பட்ட கல்வெட்டில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ஓ.ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவறில்லை. ஆனால், ரவீந்திரநாத் குமார் பெயருக்கு முன்னால் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தற்போது தேனி தொகுதியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘‘ஓட்டுப் பெட்டிகளை மாற்றி விட்டார்களோ, ரவீந்திரநாத் தான் வெற்றி பெறுவார் என்று அவர்கள் எப்படி உறுதியாக நம்புகிறார்கள்?’’ என்று எதிர்க்கட்சியினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தேர்தல் முடிந்த பின்பு, கோவையில் இருந்து 50 ஓட்டு எந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது ஏதோ தில்லுமுல்லு நடப்பதைக் காட்டுகிறது என்று தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கொதித்தெழுந்து தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தன. இதில் தேர்தல் கமிஷன் உறுதியான நடவடிக்கை எடுக்கும் முன்பாக மீண்டும் 50 ஓட்டு எந்திரங்கள், தேனிக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவிற்கு புகார் அனுப்பியுள்ளார். அதில், அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைப்பதற்கு தேனி தேர்தல் அதிகாரிகள் கள்ளத்தனமாக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.