‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பல்வலி காரணமாக ஓய்வில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சேலத்திற்கு சென்றிருக்கிறார். இன்று(ஜூன் 7) காலை அவர் சேலம் ஐந்து ரோடு சந்திப்பில் ரூ441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை கட்டப்பட்டிருக்கும் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். மாலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை(ஜூன்8) எடப்பாடியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, சென்னையில் இருந்து கோவைக்கு நேற்றிரவு வந்த எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். அப்படி கொடுத்தால் நாடு முழுவதும் கொடுப்பதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என்றார்கள். இதற்கெல்லாம் எங்கே பணம் இருக்கிறது?
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று கூறினார்கள். இப்போது அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். என்ன செய்யப் போகிறார்கள்? நாடாளுமன்றத்தில் பேசி காவிரி தண்ணீர் பெற்று தருவார்களா? கர்நாடாகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதானே நடக்கிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமாரிடம் பேசி, காவிரியில் தண்ணீரை பெற்று தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் அங்குள்ள பள்ளிகளில் தமிழ் படிக்க வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதனால், வெளிமாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக கற்றுத் தர வேண்டுமென்று பிரதமருக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்தேன், ஆனால், அதை அரசியல் ஆக்கினார்கள். அதனால், அதை நீக்கினேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.