சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு விழாவில், திமுகவினரும், அதிமுகவினரும் எதிரெதிர் கோஷங்களை மாறி மாறி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ரூ 320 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக நவீன முறையில் இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாலப் பணிகளின் ஒரு பகுதி நிறைவடைந்து, போக்குவரத்துக்காக இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
விழா மேடையில் இருந்தபடி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . விழாவுக்கு சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.யான எஸ்.ஆர் பார்த்திபனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ எஸ்.ஆர்.பார்த்திபன் விழாவில் பங்கேற்க வந்தார். விழா நடைபெற்ற சேலம் 5 சாலைப் பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், பார்த்திபன் எம்.பி.யுடன் வந்த திமுக தொண்டர்கள் பலரை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் விழா ஆரம்பித்தது முதலே சலசலப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் விழாவில் பேச்சைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விழாவில் பங்கேற்றவர்களின் பெயர்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அப்படி சேலம் மக்களை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரை உச்சரித்த போது, திமுகவினர் விசிலடித்தபடி உரத்த குரலில் தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க.. என பல முறை கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவினரும், புரட்சித் தலைவி அம்மா வாழ்க..முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க... என பலத்த கோஷம் எழுப்ப விழா நடைபெற்ற இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முகம் என்னவோ போல் ஆகிவிட்டது. அத்துடன் முகத்தை சுழித்தபடி விழா மேடையில் அமர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடமும் சைகை காட்டி, கூட்டத்தினரை அமைதிப் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடிக்கும் வரை ஒரே கூச்சலும், ரகளையுமாகவே காணப்பட்டது.