கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசும் பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் -மஜத கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை பதவி, பணம் ஆசை காட்டி, தங்கள் பக்கம் இருக்க பாஜக சூழ்ச்சி செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கர்நாடக விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பாஜகவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதுடன், வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் வசப்படுத்தியது பாஜக . இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரசை வலுவிழக்கச் செய்யும் வகையில் பாஜக திட்டமிட்டு சதி செய்வதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காந்தி சிலை முன்புறமாக சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட எம்.பி.க்கள், கையில் பாஜகவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.