அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோகி அகோரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம்லல்லா ஆகிய 3 அமைப்புகள் பிரித்து ெகாள்வது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உடனடியாக விசாரிக்க வேண்மென்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்து வாதாடி வந்தார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண்பதற்காக மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்தது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கொண்ட அந்த குழுவுக்கு, இப்ராகிம் கலிபுல்லா தலைைம வகிக்கிறார். இந்த குழு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்டு 15ம் தேதிக்குள் முடிவு எடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்தியஸ்தர் குழு சரியாக செயல்படவில்லை என்று இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அயோத்தி பிரச்சினை உடனடி தீர்வு காண வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் பராசுரன் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்தியஸ்தர் குழு அறிக்கையில் சுமுக முடிவு ஏற்படாவிட்டால், வரும் 25ம் தேதி முதல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு நாள்தோறும் விசாரணை நடத்தி முடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வரும் 25ம் தேதி முதல் தினம்தோறும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது நல்ல செய்தி என்று சுப்பிரமணியசாமி மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.