தங்கள் ராஜினாமா தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் முன் இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேரும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். பின்னர் இவர்கள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகளை எல்லாம் பாஜக தான் செய்ததாக காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் குழப்பம் நீடிக்கிறது. இதனால் குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா பற்றி சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமாரும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், சில விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு காலவரம்பு எதுவும் இல்லை எனவும் கூறி விட்டார்.
மேலும் சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமய்யாவும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். பாஜகவுடன் கைகோர்த்து உள்ள அதிருப்தியாளர்கள் உடனே திரும்பி வரவேண்டும். ராஜினாமாவையும் திரும்ப பெற வேண்டும்.
இல்லையெனில் இந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் மனு ஒன்றை நாங்கள் அளிக்க உள்ளோம். ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இதுதவிர்த்து, அடுத்து 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளோம் என்று சித்தராமய்யா கூறியிருந்தார்.
இதனால், ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசியலமைப்பு கடமையை சபாநாயகர் கைவிட்டு விட்டார். தங்களது ராஜினாமாவை ஏற்பதில் வெளிப்படையாகவே அவர் காலதாமதம் செய்து வருகிறார் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக சபாநாயகர் அலுவலகத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று பெங்களூருவுக்கு இன்று உடனடியாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.