ஜம்முவில் ஊரடங்கு தளர்வு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Article 370 fall-out: Section-144 removed, Jammu schools and colleges to reopen tomorrow

by எஸ். எம். கணபதி, Aug 9, 2019, 21:28 PM IST

ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் நேரிடும் என்று அந்த மாநில அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கூறி வந்தனர். இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.


ஜம்மு, காஷ்மீரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. மேலும், அமர்நாத் யாத்திரையை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் காஷ்மீரை விட்டு வெளியேறச் செய்தனர். அதன்பின், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைத்தனர். தொலைபேசி, செல்போன் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன.


அனைத்து வகைகளிலும் மக்கள் நடமாட முடியாமல் செய்த பின்பு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியது.


இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 4வது நாளாக எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறவில்லை. காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது. அதே சமயம், ஜம்மு பகுதியில் இந்துக்கள் அதிகம் வசிப்பதால், அங்குள்ள மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை எவ்வித அதிருப்தியையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும், ஜம்முவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜம்முவி்ல் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜம்மு மாவட்ட கலெக்டர் சுஷ்மா சவுகான் கூறுகையில், ‘‘ஜம்முவில் ஊடரங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது. எனினும், இம்மாவட்டத்தில் இணைய சேவைகள் முடக்கியே வைக்கப்பட்டிருக்கும். ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படும்’’ என்று தெரிவித்தார். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அப்பகுதில் 144 தடை உத்தரவு சில இடங்களில் அமலில் உள்ளது. கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


கத்துவாவில் கூடுதல் டிஜிபி முனீர்கான், நிருபர்களிடம் கூறுகையில். ‘‘காஷ்மீரிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது’’ என்றார்.

You'r reading ஜம்முவில் ஊரடங்கு தளர்வு பள்ளி, கல்லூரிகள் திறப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை