அ.ம.மு.க. செயலாளர் திமுகவில் ஐக்கியம் : மேலும் பலர் கட்சி தாவத் திட்டம்

pudukottai a.m.m.k. secratary bharani karthikeyan joined Dmk

by எஸ். எம். கணபதி, Sep 3, 2019, 13:19 PM IST

புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுகவில் சேர்ந்தார். அ.ம.மு.க.வில் இருந்து இன்னும் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு மே வரை உள்ளது. ஆனாலும், அதற்கு முன்பாகவே அதிமுகவை கரைத்து பலரை இழுப்பதற்கு பாஜக முயற்சி செய்யலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி முடிந்த பின்பு, அவரது கோஷ்டிக்கும், ஓ.பி.எஸ் கோஷ்டிக்கும் உள்ள சண்டைகள் அம்பலத்திற்கு வந்து விடும். அது தவிர, ஆட்சி அதிகாரப் பலன்களுக்காக அமைதி காக்கும் பலரும் கட்டுப்பாடின்றி போகக் கூடும். இந்த சூழலில் அதிமுக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன்காரணமாக, அதிமுகவில் இருந்து பலரையும் பாஜகவுக்கு முன்பே நாம் இழுத்து விட வேண்டுமென்று திமுக திட்டம் போட்டு காய் நகர்த்துவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து அதிமுகவுக்கு போக நினைப்பவர்களை இழுக்கிறது. அத்துடன், அப்படி வருபவர்களுக்கு பதவி கொடுத்து முக்கியத்துவம் தரப்படுகிறது.

செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ்ச் செல்வன், கலைராஜன் ஆகியோரின் வரிசையில் தற்போது புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன், திமுகவுக்கு தாவியுள்ளார். அவர் சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து எம்.எல்.ஏ. பதவியைக் காப்பாற்றுவதற்காக அதிமுகவுக்கு மாறிய அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரர்தான் பரணிகார்த்திகேயன்.

திமுகவில் சேர்ந்த பரணி கார்த்திகேயன் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பாடு எனக்கு பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன். புதுக்கோட்டையில் விரைவில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது, அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அமமுகவில் இருந்து பல நிர்வாகிகள் திமுகவில் இணையவிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

You'r reading அ.ம.மு.க. செயலாளர் திமுகவில் ஐக்கியம் : மேலும் பலர் கட்சி தாவத் திட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை