ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா?
சிக்கிம் முதல்வராக உள்ள பிரேம்சிங் தமாங் கடந்த 1990-ம் ஆண்டில் கால்நடைத்துறை அமைச்சராக இருக்கும்போது, நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு முதல் 2018 ஆகஸ்ட் வரை அவர் சிறையில் இருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிடமுடியாது. எனவே, 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமாங்கின் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சி, கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தமாங்கினால் தேர்தலில் போட்டியிட முடியாததால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படவில்லை.
ஆனாலும், அவரையே முதல்வராக தேர்வு செய்தனர். அதே சமயம், தமாங், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவருக்கு கவர்னரும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எனவே, பதவியேற்ற 6 மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தகுதிநீக்கத்தை ரத்து செய்து, தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று கோரினார்.
பாஜகவின் இன்னொரு அங்கமாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் தேர்தல் ஆணையமும் அவரது மனுவை அப்படியே ஏற்றுக் கொண்டது. அவருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தற்போது, சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
அப்படியே இந்த விஷயத்தை 2001ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. கடந்த 2000ம் ஆண்டில் டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், அவர் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அவர் 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனாலும், தமாங் போன்றே ஜெயலலிதாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள். அப்போதிருந்த கவர்னர் பாத்திமா பீவியும், தேர்தல் முடிவுகள் வந்த சில மணி நேரத்திற்குள் அவசர, அவசரமாக ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். (அதன்பிறகு, பாத்திமாபீவி ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது வேறு கதை).
ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடியாதவர் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஜெயலலிதா பதவியிழந்தார். அதன்பிறகு டான்சி வழக்கில் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்து, விடுதலையானார். பிறகு, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு மீண்டும் முதல்வரானார். இடையில் எட்டு மாதங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதாவும், தமாங்கும் ஒரே நிலையில் பதவியேற்றிருந்தாலும், ஜெயலலிதாவுக்கு பதவி பறிபோனது. தமாங்கிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இதற்கு சட்டத்தின் ஓட்டையை காரணமாக சொல்வதா? அல்லது காலத்தை காரணமாக சொல்வதா? காலத்தை நாம் காரணமாக சொல்லலாம். ஆனால், காங்கிரஸ் சொல்கிறது, சலாம்தான் காரணம் என்று. அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் சீனியர் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, நீங்கள், துஷி கிரேட் ஹோ என்று மத்திய பாஜக அரசிடம் சலாம் போட்டால், எந்த சட்டத்தில் இருந்தும் உங்களுக்கு விலக்கு கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் சிக்கிம் முதல்வருக்கு கிடைத்த சலுகை என்று கிண்டலாக கூறியிருக்கிறார். துஷி கிரேட் ஹோ என்றால் என்ன தெரியுமா? நீங்க ரொம்ப நல்லவரு...