காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கைத்தடி பரிசளிக்க தொண்டர் ஒருவர் காத்திருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், 7-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அவரை பார்ப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருகிறார். இதனிடையே இன்று மாலை முன்னாள் பிரதமர் தேவகவுடா கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வர உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மருத்துவமனை வாசலில், கைத்தடியுடன் தொண்டர் ஒருவர் காத்திருக்கிறார்.
சென்னை ஆவடியை அடுத்த அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கரன். 86 வயதான அவர், திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர தொண்டர். கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து, தான் சொந்தமாக தயாரித்துள்ள கைத்தடியை கருணாநிதியிடம் கொடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை வாயில் முன்பு, ஜெயசங்கரன் காத்து கிடக்கிறார்.
தான் கொண்டு வந்துள்ள கைத்தடியை கருணாநிதி ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதே தனது ஆசை என ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.