சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தடுப்பு பிரிவு, தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். பல புரதான சின்னங்கள், வரலாற்று பழமை வாய்ந்த சிலைகளை கண்டு பிடித்து தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறி, வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் முறையிட்டார்.
"கிரானைட் முறைகேடு, தூத்துகுடி துப்பாகி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும், அக்கறை காட்டாத அரசு, உள்நோக்கத்துடன் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியிருக்கிறது" என அவர் குற்றம் சாட்டினார்.
இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.