ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க உத்தரவிட்டார். இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளர்.
அந்த வரிசையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, வரவேற்பு தெரிவித்துள்ளார். "லஞ்ச ஒழிப்புத் துறை முதலமைச்சருக்கு அளித்த நற்சான்றை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.நெடுஞ்சாலை த்துறையின் ரூ.3,120 கோடி மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள்,முதலமைச்சரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு,முறைகேடுகள் நடந்துள்ளன."
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் அனைத்து துறைகளில் ஊழல் மலிந்து கிடக்கிறது.ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்." என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.