டெல்லியில் வங்கி ஒன்றுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வங்கியின் காசாளரை சுட்டுக்கொன்று பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்மேற்கு பகுதியான சாவ்லா டவுணில் கார்ப்பரேஷன் வங்கி கிளை ஒன்று உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இந்த வங்கிக்குள் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதம் தாங்கிய ஆறு பேர் நுழைந்தனர்.
வங்கி பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கிய அவர்கள், அவரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் வங்கி வாடிக்கையாளர்கள் பத்து பேரையும் வங்கி ஊழியர்கள் ஆறு பேரையும் துப்பாக்கி முனையில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
வங்கியின் காசாளர் சந்தோஷிடம் சென்ற அவர்கள், வங்கியிலிருந்த பணத்தை கொடுக்குமாறு அவரை மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே, கொள்ளையர்கள் அவரை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பின்னர் வங்கியிலிருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சுடப்பட்ட காசாளர் சந்தோஷ் அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளது. 90 நிமிடம் ஓடக்கூடிய பதிவுகளை பார்த்த காவல்துறையினர், கொள்ளையர்கள் சோனிபட் மற்றும் நாஜாஃப்கார் பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று கணித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.