திடீர் அரசியல் மாற்றம்: இலங்கையில் நகரில் ராணுவம் குவிப்பு!

Political change: the military force in the city of Sri Lanka

by Manjula, Oct 29, 2018, 16:05 PM IST

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் ரணில் விகரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டு ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் ஹாங்வெல்ல பகுதியில் நேற்று மாலை இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சேயை பிரதமராக ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருப்பதால், கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வந்தது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், அதிபர் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக நீக்கினார். உடனடியாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதிபரின் முடிவு சட்ட விரோதமானது என்று கண்டனம் தெரிவித்த ரனில் விக்ரமசிங்கே, தான் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார்.


மேலும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு உத்தரவிடவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனால் பலப்பரீட்சையை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கிவைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரிசபை இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையின் அரசியல் சட்டப்படி, பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் மரணம் அடையும்போதோ அல்லது அவர் பதவி விலகினாலோ மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டாலோ தான் அதிபரால் புதிய பிரதமரை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் நேற்று மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அதிபர் சிறிசேனா ராஜபக்சேயை பிரதமராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். 

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் "இலங்கையில் கடந்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இதனால் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை அத்துமீறல்கள் மீண்டும் அரங்கேறும் நிலை உருவாகி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் ராஜபக்சேயின் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. சிறைக்கைதிகளை கொன்றும் குவித்தது" என்று குறிப்பிட்டு உள்ளது.

அதிபர் சிறிசேனா-ரனில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது, சிறிசேனாவுக்கு எதிராக சபாநாயகர் போர்க்கொடி உயர்த்தி இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கொழும்பு நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

You'r reading திடீர் அரசியல் மாற்றம்: இலங்கையில் நகரில் ராணுவம் குவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை