பாகற்காய் என்றாலே முதலில் முகம் சுழிப்பு தன் ஏற்படும். ஆனால், இதில் உள்ள கசப்புத்தன்மை மற்றும் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பாகற்காயில் இருக்கும் கசப்பை சற்று நீக்கி ரெசிபியாக மாற்றினால் பாகற்காயைக்கூட விரும்பி சாப்பிடலாம். சரி, பாகற்காய் கிரேவி எப்படி செய்றது என்று பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
பாகற்காய்: 350 கிராம் கொத்தமல்லி விதை: 4 தேக்கரண்டி கடலைப்பருப்பு: 4 தேக்கரண்டி தேங்காய்: 1 மிளகாய்: 10 மிளகு: 1 தேக்கரண்டி அரிசி மாவு: 1 தேக்கரண்டி துவரம் பருப்பு: 2 மேஜைக்கரண்டி பெருங்காயம்: சிறு துண்டு மஞ்சள் பொடி: 3 தேக்கரண்டி வெல்லம்: அரை அச்சு எண்ணெய்: 2 மேஜைக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கறிவேப்பிலை, உப்பு, கடுகு: தேவையான அளவு
செய்முறை:
புளியை நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ளவும். பாகற்காயை நறுக்கி கழுவிக் கொள்ளவும். அதனுடன் 2 கரண்டி புளிக் கரைசலைச்சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவறைைக் கலந்து சட்டியில் வேக வைக்கவும்.
துவரம் பருப்பையும், கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு,கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
பின்பு அதனுடன்பெருங்காயத்தையும் பொரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மிக்ஸியில் வைத்து அரைக்கவும். பாகற்காய் வெந்ததும் மீதமுள்ள புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப்போட்டுக் கலக்கி, அதில் வேக வைத்த பருப்புகளைக் கொட்டவும்.
அதனுடன் மிளகாய், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்புகறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைத்தால் பாகற்காய் குழம்பு பரிமாறுவதற்குத் தயார்.