தீபாவளி என்றாலே அதிரசம் இல்லாமல் இருக்காது, இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெல்ல அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கிலோ
வெல்லம் - 3/4 கிலோ
ஏலக்காய் - 6
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து களைந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு ஒரு காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை போட்டு பரப்பி விட்டு நிழலில் உலரவிடவும்.
- அரிசி நன்கு காய்ந்து விடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும் போதே எடுத்து விடவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சல்லடையில் மீதம் இருக்கும் மாவையும் மிக்ஸியில் போட்டு மீண்டும் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூள் செய்து போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் பாகின் சுவை நன்றாக இருக்கும்.
- பாகின் பதம் தெரிந்துக் கொள்ள ஒரு தட்டில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது பாகை எடுத்து ஊற்றினால் கரையாமல் இருக்க வேண்டும், கையில் எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் விரலில் ஒட்டாமல் முத்து போல் வரவேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவைக் கொட்டி அதில் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். அதில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.
- ஒரே முறையில் அனைத்து பாகையும் கொட்டிவிடாமல் சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு கைவிடாமல் கிளறவும். மாவும் வெல்லமும் ஒன்றாக சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பிறகு அதனை அப்படியே பாத்திரத்தில் வைத்து சுமார் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். மாவு அப்போதுதான் புளித்து பதமாய் வரும்.
- இரண்டு நாட்களுக்கு பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு ப்ளாஸ்டிக் கவரின் மீது சிறிது எண்ணெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வைத்து, கைகளால் வட்ட வடிவில் தட்டையாக தட்டவும்.
- பிறகு அதனை எடுத்து எண்ணெய்யில் போட்டு வேக வைக்கவும். தீயை அதிகம் வைக்காமல் மிதமான தீயில் வேக விடவும்.
- சற்று பொன்னிறமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைத்து, இரண்டு புறமும் சற்று சிவந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிடவும். வாணலியில் உள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு இரண்டு, மூன்று போட்டு எடுக்கலாம். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாதவாறு பார்த்து செய்யவேண்டும்.