ஸ்வீட் கார்ன் என்றால் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. நாம் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஸ்வீட் கார்ன் மசாலா கேள்விபட்டு இருக்க மாட்டோம். பிரட் டோஸ்ட் போட்டு இதனை அதன் மேல் பரப்பில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சரி வாங்க ஸ்வீட் கார்ன் மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
ஸ்வீட் கார்ன் - 1 1/2 கப்
எண்ணெய் - 3 ஸ்பூன்
வெங்காயம் - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
தக்காளி - 2
பூண்டு - 4
வரமிளகாய் - 3-4
செய்முறை:-
முதலில் மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதில் உப்பு, சர்க்கரை, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.