ஏறிய பிட்காயினின் மதிப்பை கீழே இறக்கிய அருண் ஜேட்லி...

by Isaivaani, Feb 8, 2018, 07:35 AM IST
கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான பிட் காயினின் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களாக ஏறுமுகமாகவே இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வரை அதன் விலை விண்ணை நோக்கியே உயர்ந்து கொண்டிருந்தது.ஆனால் மத்திய பட்ஜெட் பிட்காயினின் மதிப்பை மண்ணை நோக்கி இழுக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று பிட்காயின் தனது மதிப்பில் 20 சதவீதத்தை இழந்துள்ளது. அதாவது 7,800 டாலரில் இருந்து ஒரே வாரத்தில் 6,190 டாலராகக் குறைந்ததுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை பிட் காயின் மதிப்பு இந்த அளவுக்கு சரிந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டின் இறுதியில் இதன் மதிப்பு 26 மடங்கு அதிகரித்தது. அதிகபட்சமாக ஒரு பிட்காயின் மதிப்பு 19,511 டாலர் வரை உயர்ந்து காணப்பட்டது.
உலக நாடுகள் பல, பிட்காயின் பரிவர்த்தனைகளை தடை செய்து வருவதால், இந்திய அரசும் பிட்காயின் மீதான தனது முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிட்காயின் தொடர்பான அரசின் முடிவினை தெளிவு படுத்தியுள்ளார்.
பிட்காயின் போன்ற அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் எனவும், கிரிப்டோகரன்ஸிகளுக்கு இந்தியாவில் விதிமுறைகள் உருவாக்கவில்லை எனவும், இதுவரை கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனைக்கு எந்த நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை எனவும் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையின்போது தெரிவித்திருந்தார். மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இவை பயன்படுத்தப்படுவதால் பிட்காயினை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிட்காயினை ஒழுங்குமுறை படுத்துவதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.
பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என பட்ஜெட்டில் அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பின்விளைவுகள் தற்போது பெரிய அளவில் ஏற்படத் தொடங்கியுள்ளன. தற்போது பிட்காயினின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில் கிரிப்டோ கரன்சிகளின் மீதான தடை காரணமாக, முதலீட்டாளர் பிட்காயின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும், அதன் காரணமாகவே பிட்காயினின் மதிப்பு சரிந்து வருவதாக கூறப்படுகிறது.

You'r reading ஏறிய பிட்காயினின் மதிப்பை கீழே இறக்கிய அருண் ஜேட்லி... Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை