சிரியாவின் போர் வரலாறு - சாமானியனின் பார்வையில்...

சிரியாவின் போர் வரலாறு - சாமானியனின் பார்வையில்...

Mar 1, 2018, 15:54 PM IST

சிரியாவில் உள்நாட்டுப் போர்...

2011 காலகட்டத்தில் சிரியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட மக்கள் போராட்டம், தற்போது உள்நாட்டுப்போராக உருவாகி தன் மக்களையே கொல்லும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

Syria War

கடந்த இரண்டு வாரங்களாக சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ராணுவ படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிரியாவின் வரலாறு:-

இந்தியாவை போலவே சிரியாவும் ஆங்கிலேய-பிரெஞ்ச் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. 1946-ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1960 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது. அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. 1970-களில் ஹபீஸ் அல் அசாத் அதிபராக ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார். அப்போதிருந்தே ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் எழுந்து கொண்டே இருந்ததன. அவரும் இரும்புக்கரம் கொண்டு அதனை அடக்கிக் கொண்டே இருந்தார்.

சிரிய பிரச்னையின் சாரம்சம்:-

ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தின் நிலைக்கு, சிரியா தற்போது இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் இளமை காலத்தில், அவர் எந்த அக்கிரமத்தை கண்டு பொங்கியெழுந்தாரோ, எதை எதிர்த்து அரசியலில் காலடி எடுத்து வைத்தாரோ, எதற்காக காங்கிரஸை விட்டு விலகி திராவிட கட்சியை உருவாக்கினாரோ, எதை தன் எதிரியாக நினைத்து இறுதி மூச்சு வரை எதிர்த்தாரோ, அந்த ஜாதியமும் அதன் இட ஒதுக்கீட்டு கொடுமைகளும்தான் சிரியாவை இன்றுவரை படுத்தி எடுத்து வருகிறது.

சிரியா 90 சதவிகித முஸ்லீம்கள் கொண்ட நாடு, அங்கு சன்னி, ஷியா என்ற இரண்டு பிரிவுகள் (மத ஜாதிகள்) உள்ளன, அதில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சார்ந்தவர்கள், ஆனால் மீதமுள்ள 10 சதவீத மக்கள் கொண்ட ஷியா பிரிவை சார்ந்தவர்களே மேல்தட்டு மக்களாக விளங்குகிறார்கள். அந்நாட்டின் அதிபர் ஹபீஸ் அல் அசாத் ஷியா பிரிவை சார்ந்தவர், அதனால் ஷியா பிரிவை சாந்தவர்களே நாட்டின் ஆட்சி அதிகாரங்களை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள், முதல்தர அரசாங்க பணிகள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிற கீழ்தட்டு அரசு வேலைகளில் மட்டுமே சன்னி பிரிவினர் பணியாற்ற முடியும்.

Syria War

தந்தை-மகன் ஆட்சிமுறை:-

1970 முதல் ஹபீஸ் அல் அசாத் ஆட்சி புரிந்து வந்தார். இட ஒதுக்கீட்டு பிரச்சனை தவிர, மற்ற பிரச்சனைகளில் கொஞ்சம் நியாயமாகவே நடந்து கொண்டார். 1998-ல் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார். ஆனால் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அதிலும் விதி நின்று விளையாடியது. பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத் நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை.

ஹபீஸ் 2000-ல் மரணம் அடைந்தார். அப்போதுதான் பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். “படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார், நல்லாட்சி மலரும்” என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவரால் அடுத்த தலைமுறையையே காவு வாங்கப்படும் என்பது அப்போது யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போர்:-

அவர் ஆட்சிக்கு வந்ததும் சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டார்கள். அரசின் அனைத்து பிரிவில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டார். ஆசையோடு காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 18 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். இந்த 48 வருடங்களில் மக்களுக்குப் போதிய வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருக்கிறது. இதை எதிர்த்துதான் மக்கள் வீதி இறங்கி போராடினர்.

போர் தொடங்கியதும் ரஷ்யா போன்ற உலக நாடுகள் பல, அதிபருக்கு உதவியாக வந்தன. துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருக்கிறது. ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இதில் மூக்கை நுழைக்க, பொதுமக்கள் யார், போராளிகள் யார் என்ற பேதம் இல்லாம் அழிக்கத் தொடங்கிவிட்டார்கள் சிரிய-ரஷ்ய ராணுவ படைகள். ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு போராட்டக்காரர்கள் தள்ளப்பட்டார்கள். போராட்டம் தற்போது போர்க்களமாகி, சிரியா என்னும் பூந்தோட்டம் தன் தொட்டிச்செடிகள் பலவற்றை பறிகொடுத்து நிற்கிறது.

Syria War

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், சிரியாவில் அரசுப்படை ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

போர் நிறுத்தம்:-

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி முதல், அதிபர் பஷர் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்றுவரை ஓயவில்லை. இந்த போரில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இது 5 லட்சத்தை தாண்டும் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப்போர், முடியும் என்பதற்காக எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

இந்நிலையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. ஆனால் போர் அதன் பின்னும் தொடர்கிறது. இதையடுத்து சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் 5 மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார். இந்த போர் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது இருந்து அமலுக்கு வரும் என்ற தகவலும் இல்லை.

உலக நாடுகள் பல இந்த போரை மறைமுகமாக ஆதரிக்கத்தான் செய்கின்றன. எண்ணெய் வளம் கொண்ட முஸ்லீம் நாடுகளில், தீவிரவாதிகள்-ஆபத்து- பாதுகாப்பு- ராணுவம் குவிப்பு என நரிச்சேட்டை செய்யும் அமெரிக்கா, இந்த பிரச்சனையிலும் தனது தந்திரங்களை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பாத்து காத்திருக்கிறது.

ஆதங்கம்:-

போரின் மூலம் ஆதாயம் தேடும் அமெரிக்காவிடம் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறோம்... ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், யாருக்காவது தூண்டிவிட்டு, அல்லது யாருடனாவது கூட்டணி சேர்ந்து, இன்னும் ஏன் உங்கள் நரி விளையாட்டை ஆரம்பிக்கவில்லை. மனிதர்கள் இல்லாத மயானங்களாக சிரியா மாறிய பின்பு, அதில் உங்கள் கொடியை நாட்டி... ("உங்கள் நாட்டில் வாழ்ந்த பூர்வக்குடிகளை அழித்து, புதிய நாட்டை கொலாம்பஸ் கண்டுபிடித்தது போன்று") புதிய வரலாறு எழுத காத்திருக்கிறீர்களோ...!!

Syria War

இது சிரியாவிற்கு:-

போரில் குழந்தைகளின் முகங்களை பார்த்தும் கூட உங்களில் யாருக்கும் ஈவு இரக்கங்கள் உருவாகவில்லை. கொத்துக்கொத்தாக கொன்றுபோட்டுள்ளீர்கள். உலக அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும். ஐஎஸ் தீவிரவாதிகளின் தூண்டுதல்கள் இருக்கட்டும். அடுத்த தலைமுறை உங்களுக்கு என்ன அநியாயம் செய்ததது.? எல்லா போரிலும் போருக்கு பின் அமைதி தானே மிஞ்சும்... எல்லாரையும் கொன்று யாருடன் அமைதியாக வாழப்போகிறீர்கள்.? ஹிட்லரின் கதையும், சதாம் உசேனின் கதையும், கடாஃபியின் கதையும் சொல்லும் முடிவுகளை கேள்விப்பட்டது இல்லையோ...!!!

நீதி:-

மதம் என்ற ஒரு குடையின் கீழ், மனிதர்கள் பல பிரிந்திருக்க... மழை விழுந்தாலும், இடி விழுந்தாலும் பாதிப்பு குடைக்கு அல்ல... மனிதா உனக்கும் எனக்கும் தான்...!!!

You'r reading சிரியாவின் போர் வரலாறு - சாமானியனின் பார்வையில்... Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை