உஷா மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்... விரிவான பார்வை

உஷா மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்...

Mar 9, 2018, 08:40 AM IST

சட்டமும், சமநீதி மறுப்பும், காவல்துறையின் ஆணவமும் சேர்ந்து உஷாவின் இறப்பிற்கு காரணமாகிவிட்டது. அவள் உயிரையும், அவள் வயிற்றுக் கருவையும், அவள் கணவனின் கனவையும் அந்த ஒரே இரவு கலைத்து அழித்துவிட்டது. இந்த பரிதாபத்திற்குரிய சம்பவம் கேட்கும்போதே நெஞ்சை வலிக்கச் செய்கிறது.

Usha

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவித்ததோடு சட்டம் தன் வேலையை நிறுத்திக்கொண்டது. அதுசார்ந்த துறையினர் அந்த பணிகளை நேர்மையாக செய்கிறார்களா என கண்கானிக்கத் தவறியதுவிட்டது. அந்த சட்டங்களை அது சார்ந்த காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு அமல்படுத்தவில்லை, இன்றளவும் வருமானம் பார்க்கவே அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாத பயணிகளையே காவல்துறையினர் விரும்புகிறார்கள்.

500 கொடுக்க வேண்டிய தவறுக்கு 100 கொடுத்து தப்பிக்க எளிய வழி உள்ளதால், அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் பெரிதாக எதிர்ப்பு காட்டுவதுமில்லை, விதிமுறைகளுக்கு மதிப்பளிப்பதும் இல்லை. முதல் தவறே சட்டத்தை சொல்லி தப்பிக்க நினைக்கும் நம்மிடம் இருந்துதானே தொடங்குகிறது. இதற்கு நாமும் ஒரு காரணம் எனலாம். நாம் மட்டுமே காரணமும் அல்ல. அரசாங்கமும் இதற்குக் காரணம்.

மாதம் இவ்வளவு ஹெல்மெட் கேஸ் பதிவுசெய்ய வேண்டும் என உத்தரவு போடும் காவல்துறை உயர் அதிகாரி, அதை பயன்படுத்தி கேஸ் எழுதாமல் லஞ்சம் பெற்று அனுப்பும் இரண்டாம், மூன்றாம் நிலை காவலர்கள், காவலர் நிற்க சொல்வதையும் மீறி நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகள் என, இவர்கள் அனைவருமே சேர்ந்து அந்த பெண்ணையும், அவள் வயிற்றில் வளர்ந்த கருவையும் கொன்றுவிட்டார்கள்.

ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தினால், 100% அமல்படுத்தியிருக்க வேண்டும், நம் காவலர்களின் பணியை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை... நினைத்தால் பிடிப்பது, மாசக்கடைசியில் பிடிப்பது, பாதி பேரை பிடிப்பது, மிதி பேரை விடுவது என தங்களுக்கான சட்டமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதனாலேயே பணம் படைத்தவர்களும், ஹெல்மெட் வாங்க பணம் இல்லாதவர்களும் அதை சட்டை செய்வதில்லை.

நான் எனது நண்பருடைய வண்டியில் ஒரு காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தேன். நண்பர் வண்டி ஓட்டினார், ஹெல்மெட் போட்டிருந்தார், இருந்தாலும் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டோம். சோதனை செய்ததில் என் நண்பருக்கு இன்சூரன்ஸ் முடிந்து ஒரு வாரம் ஆனது தெரிய வந்தது. காவல் நிலையத்திற்குள் சென்று 200 ரூபாய் அழுதுவிட்டு திரும்பினோம்.

வெளியே நின்றிருந்த காவலரை சிறிதுநேரம் கவனித்தேன். எங்களைப் போல் ஒருசிலரை மட்டுமே நிறுத்துகிறார். அந்த ஊரைச் சேர்ந்த பிரபலங்களையும், அந்த காவலருக்கு பழக்கப்பட்டவர்களையும் நிறுத்தவே இல்லை. மாறாக, அவர்களும் ஒரு சல்யூட் அடித்துக்கொண்டு போய்கொண்டே இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை சொல்ல காரணம், நான் மேலே சொன்ன "சமநீதி மறுப்பு" இதுவும் ஒரு வகையில் இந்த கொலைக்கு காரணமாகி விடுகிறது.

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனும் சட்டத்தை நீக்கினால் இந்த மாதிரி ஒருசில இறப்புகள் குறையும். ஆனால் சாலை விபத்துக்கள் பல பெருகும் அபாயம் உள்ளதால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோம்.

சக்கரத்திற்கு காற்று எவ்வளவு முக்கியமோ, அதுபோல் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கு ஹெல்மெட் முக்கியம் என்பதை மக்கள் உணரும் வகையில் சட்டத்தை கடுமையாக அமல் படுத்த வேண்டும். அல்லது, சட்டத்தை அறிவுறுத்தலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். போகிற உயிர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும், உங்கள் ஓட்டை சட்டத்தின் வழியாகத் தான் போக வேண்டும் என்கிற அவசியம் எங்கள் உயிருக்கு இல்லை.

முதலில் சாலைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, அல்லது நல்ல சாலைகளை போட்டுவிட்டு, பின்னர் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுதினால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், ஹெல்மெட் போட்டிருந்தாலும் தமிழகத்தின் சில மோசமான சாலைகள், எளிதில் விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போட்டிருந்தும் இறந்திருக்கிறார்கள்.

தரமான சாலைகள் மட்டுமின்றி, கடுமையான சாலை விதிகள் நடைமுறை படுத்தப்பட்டால் தான், இதுபோன்ற சம்பவங்கள் இனி நம் காதுகளில் கேட்காமல் இருக்கும். சாலையோரத்தில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் உள்ள நாடு நம் தமிழ்நாடு, வாங்கி வீட்டிற்குச் சென்று குடித்தால் வருமானம் குறைந்துவிடுமே..!! அதனால் ஒவ்வொரு கடையிலும் பார் வசதி பார்க்கிங் வசதி. போதாத குறைக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாதென்று சட்டம் வேறு, போதையில் ஓட்டினால் பிடிப்பதற்கு போதையிலேயே தனிப்படை, குடிக்காமல் ஓட்டினால் பலத்த சோதனை, எப்படியாவது 100 கன்ஃபார்ம்.

காவலர் பணி என்பது கடினமான வேலை தான். விடுமுறை கிடையாது, இரவு பகல் பாராமல், மழை, பனி, வெயில் என எல்லா பருவநிலையையும் நேரடியாக அனுபவிக்க வேண்டும். அதற்காக ஊரை அடித்து உலையில் போட நினைப்பது எந்த வகையில் நியாயம், சாலையில் வருபவர்கள் எல்லோரும் அம்பானி, அதானிகளா.? சோதனை என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் உஷாவின் இழப்பு மூலம் முடிவுக்கு வருமேயானால் நலம்.

விரட்டிச் சென்று பிடிக்கும் அளவிற்கு உஷாவின் கணவன் குற்றச் செயலில் ஈடுபடவில்லை. தன்னை மதிக்காமல் சென்றவர்களை மிதித்து தள்ளிவிடும் அளவிற்கு கோபப்படுகிறது தமிழக காவல்துறை. இந்த கோபத்தை பட்டப்பகலில் நடுரோட்டில் நடக்கும் வெட்டுகுத்து மற்றும் கொலைகளுக்கு காட்டியிருந்தால் சிறப்பாக இருக்கும். அந்த சமயங்களில் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் காவல்துறையினர் நின்றிருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏன்.. கொலைகாரனை மிரட்டி காசு வாங்க முடியாதே..!!

உஷாவின் மரணத்திற்கு காரணமான காவல் அதிகாரிக்கு கொடுக்கப்படும் தண்டனை, இதுபோன்ற சம்பங்கள் இனி நிகழாமல் இருக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கு சாத்தியமில்லை என நினைக்கிறேன். எட்டி உதைக்கவில்லை, விரட்டி சென்றபோது விபத்து நடந்தது என, தவறை மூடி மறைப்பதுபோல் அறிக்கை விடும் ஆட்சியர்கள் ஆளும் இந்த நாட்டிலே... இந்த சம்பவம் ஒரு வடுவாகவே இருக்குமே தவிர, முடிவாகவோ, பாடமாகவோ அமையும் என்பதில் சிறிதும் நம்பிக்கையில்லை.

You'r reading உஷா மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்... விரிவான பார்வை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை