மகாராஷ்டிராவில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கால்நடை பயணமாக தொடங்கிய பேரணியை மாணவர்களின் நலன் கருதி நள்ளிரவில் நடத்தினர்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் கடந்த 5ம் தேதி முதல் நாசிக் பகுதியில் இருந்து பேரணியை தொடங்கினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு மும்பை நகருக்கு அவர்கள் வந்தடைந்தனர். இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை ஆசாத் மைதானம் நோக்கி பேரணி செல்வதாக முடிவு செய்திருந்தனர். ஆனால், அம்மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருவதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தங்களது பேரணி திட்டத்தை நள்ளிரவே நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று நள்ளிரவே விவசாயிகள் பேரணியை நடத்தி காலை மைதானத்திற்கு வந்தடைந்துள்ளனர். இந்த மைதானத்தில் தற்போது 75 ஆயிரம் விவசாயிகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி பேரணியை நள்ளிரவில் நடத்திய விவசாயிகளின் செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.