பால் கம்பெனி ஒன்றின் உள்ளே நடந்த விஷயம் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை எழுப்பியுள்ளது. துருக்கியில் கொன்யாவின் மத்திய மாகாணத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்குள்ள பணியாளர் பால் நிரப்பியிருக்கும் பெரிய பாத்திரத்தினுள் படுத்து, பாலை சிறிய பாத்திரத்தில் முகந்து தலையில் ஊற்றிக்கொள்ளும் காட்சி வீடியோவாக டிக்டாக்கில் பரவியது. உடனடியாக அந்த நிறுவனம் மூடப்பட்டது.
விசாரணையில் குளித்த நபர் பெயர் எம்ரே சாயர் என்று தெரிய வந்தது. அவர் குளித்தததை உகுர் டர்கட் என்பவர் வீடியோ எடுத்து டிக்டாக்கில் பகிர்ந்துள்ளதும் தெரிய வந்தது. இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நிறுவனத்தினர் டிக்டாக்கில் பதிவிட்ட டர்கட்டின் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எம்ரே சாயர் சுத்தப்படுத்தும் திரவம் கலந்த தண்ணீரில் தான் குளித்துள்ளார்; பாலில் குளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.