தேக்கடியில் அனைத்து படகுகளும் ஓடத் தொடங்கின.. சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்

by Nishanth, Nov 18, 2020, 18:44 PM IST

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடியில் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் இங்குள்ள ஏரியில் வழக்கம் போல அனைத்து படகுகளும் ஓடத் தொடங்கின. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் குறிப்பிடத்தக்கதாகும். தேக்கடி என்றாலே படகு சவாரி தான் அனைவரின் நினைவுக்கு வரும். காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள், புலிகள் உள்பட வன விலங்குகளை பார்த்து ரசித்தவாறே படகு சவாரி நடத்துவது மிகவும் இனிமையான அனுபவம் ஆகும். தமிழ், இந்தி, மலையாளம் உட்பட ஏராளமான சினிமாக்களின் படப்பிடிப்புகள் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடைபெற்றுள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் கடந்த 11 வருடங்களுக்கு முன் ஒரு பெரும் சோகமான சம்பவமும் நடந்தது.

கடந்த 2009ம் ஆண்டு இந்த ஏரியில் நடந்த அந்த படகு விபத்தை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது. டெல்லி, கொல்கத்தா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 82 பணிகள் ஒரு படகில் பயணம் செய்தபோது எதிர்பாராவிதமாக தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் கேரளாவில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால் தேக்கடியும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி கடந்த பல மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன. இதையடுத்து தேக்கடியும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்ப தொடங்கியது. இங்கு வழக்கமாக ஒரு நாளில் 5 முறை படகுசவாரி நடைபெற்று வருகிறது.

காலை 7.30, 9.30, 11.15, மதியம் 1.30 பிற்பகல் 3.30 ஆகிய நேரங்களில் படகுகள் இயக்கப்பட்டு வந்ததன. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதலில் சில நாட்கள் 9.30 மணிக்கும், பிற்பகல் 3 .30 மணிக்கு மட்டும் படகு சவாரி நடத்தப்பட்டு வந்தன. சுற்றுலாப் பயணிகள் வருகை மெல்ல மெல்ல அதிகரித்ததை தொடர்ந்து காலை 11.15க்கும் சவாரி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கியதால் தற்போது முழு அளவில் 5 படகு சவாரிகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு கட்டணம் 385 ரூபாய் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக 10 வயதுக்கு குறைந்த மற்றும் 60 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு அனுமதி இல்லை.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை