வாட்ஸ்அப் செயலி, பண பரிவர்த்தனைக்கான அனுமதியை கோரியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் தேசிய பணப்பட்டுவாடா கழகம் இதற்கான அனுமதியை வழங்கியது. இந்தியாவில் பண பரிவர்த்தனை சேவையில் அதிகபட்சமாக 2 கோடி பயனர்களை இணைத்துக் கொள்ளும் வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. பேடிஎம், கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட சேவைகளோடு வாட்ஸ் அப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.
வாட்ஸ்அப்பின் பண பரிவர்த்தனை சேவையில் 160க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. பி2பி என்னும் பியர் டூ பியர் பரிவர்த்தனை வசதி 10 இந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் பே சேவையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.