சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் மரணம்

by Nishanth, Jan 5, 2021, 19:01 PM IST

சாகித்ய அகாடமி மற்றும் கலைமாமணி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் (87) இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் நாளை திருவனந்தபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது. பிரபல தமிழ் எழுத்தாளரான ஆ.மாதவன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தார். சொந்த ஊர் குமரிமாவட்டம் என்றாலும், இவரது முன்னோர் பல வருடங்களுக்கு முன்பே திருவனந்தபுரத்தில் குடியேறி விட்டனர். திருவனந்தபுரம் சாலை என்ற இடத்தில் உள்ள தமிழ் பள்ளியில் படித்த இவர், பின்னர் திருவனந்தபுரத்தில் தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். திருவனந்தபுரம் சாலையில் இவரது தந்தைக்கு ஒரு பாத்திரக் கடை இருந்தது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த கடையில் தான் மாதவன் இருப்பார். அங்கிருந்து தான் இவர் கதை எழுதத் தொடங்கினார். கிருஷ்ண பருந்து, புனலும் மணலும், யானைச்சந்தம், கடைத்தெரு கதைகள், மாதவன் கதைகள் என பல நூல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய இலக்கிய சுவடுகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 2015ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 2009ல் அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கைதமுக்கு என்ற இடத்தில் தன்னுடைய மகள் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் மாதவன் மரணமடைந்தார். இவரது உடல் நாளை திருவனந்தபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது. இவரது மனைவி சாந்தா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரே ஒரு மகன் கோவிந்தராஜும் சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். இவர் தவிர கலை செல்வி, மலர் செல்வி என்ற 2 மகள்களும் இவருக்கு உள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள மகள் கலை செல்வியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாதவனின் உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை