டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கார் விற்பனையில் ஹூண்டாய் மற்றும் மாருதி நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் அசைக்க முடியாத நிறுவனமாக்க டாடா நிறுவனம் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு வாகன சந்தையில் சிறப்பாக களமிறங்கி குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளது. தியாகோ மினி, நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஆல்ட்ரோஸ் ஹட்ச் போன்ற மாடல் கார்களின் தேவை அதிகரித்ததால் அவற்றின் தயாரிப்பும் அதிகரித்தது.
இதன் ஒட்டுமொத்த மாத விற்பனை குறைந்தது 22,000 யூனிட்டுகளுக்கு அதிகமாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப டாடா மோட்டார்ஸ் இனி மின்சார கார்கள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட உள்ளது. மின்சார பெட்ரோல் , டீசல் கார்களை விட 15 முதல் 20 சதவீதத்திற்கு மிகாமல் விலை நிர்ணயம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும் பேட்டரி வரம்பை ஒரு முறை சார்ஜ் செய்து குறைந்தபட்சம் 200 கி.மீ. வரை பயணிக்க ஏற்ற வகையில் மேம்படுத்தவும் முடிவுசெய்துள்ளது.
டாடா மோட்டார்ஸின் டைகர் செடான் மற்றும் நெக்ஸன் எஸ்யூவியின் மின்சார ரகங்கள் 312 கி.மீ வேகத்தில் ஒற்றை சார்ஜில் இயங்குகின்றன. இதன் விலை டெல்லியில் ரூ .9.6 லட்சம் மற்றும் ரூ .14 லட்சம் ஆகும். இந்நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் மின்சார வாகன சந்தையில் தன் கவனத்தை செலுத்தவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் டாடா பவர் , டாடா ஆட்டோகாம்ப் (மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம்) மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ( மின்சார கார் பேட்டரி செல்கள் தயாரிக்கும் நிறுவனம்) போன்றவை மின்சார கார்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என டாடா நிறுவன பயணிகள் வாகன பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.