சியோல்: சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இரு இணை நிறுவனங்களை ஒன்றிணைக்க தென் கொரிய அரசின் அதிகாரபூர்வ ஆதரவை பெறுவதற்காக அதிபர் பார்க் கியுன்-ஹேயின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய் லீ நன்கொடைகள் வழங்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
நன்கொடைகள் அதிபர் பார்க் கியுனுக்கு வழங்கப்படும் லஞ்சமாக சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட விசாரணையின்போது, ஜே ஒய். லீ இதற்கு மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து, சாம்சங் குழுமத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஜே ஒய் லீ உள்ளிட்ட 4 முக்கிய தலைவர்கள் மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ஜே ஒய் லீ சிறையில் அடைக்கப்பட்டார்.
சில மாத சிறையில் இருந்த நிலையில், தண்டனை குறைக்கப்பட்டு மேல்முறையீட்டில் தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம், சியோல் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிய நிலையில், தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.