Monday, Aug 2, 2021

எனது சாம்பலை புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் இறப்பதற்கு முன் டாக்டர் சாந்தா கூறியது

by Nishanth Jan 21, 2021, 18:06 PM IST

'ஒரு வேளை நான் இறந்தால் எனது சாம்பலை இந்த புற்று நோய் மருத்துவமனையை சுற்றிலும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை'...... இது தான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி சாந்தாவின் கடைசி விருப்பமாகும். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவை தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தன்னலமற்றவர், ஏழை நோயாளிகளுக்காக இரவும், பகலும் அரும்பாடுபட்டவர் இப்படி பல பெருமைகள் இவரைப் பற்றிக் கூறலாம். இவரது ஒரு புன்னகையும், பரிவும் போதும் நோயாளிகளுக்கு....வேறு மருந்து எதுவும் தேவையில்லை என்று சிலர் கூறுவார்கள். பொதுவாக பெரும்பாலான டாக்டர்களிடம் இல்லாத குணமும் இது ஒன்று தான். நோயாளிகளிடமிருந்து பணத்தைப் பறிப்பதே ஒரே குறிக்கோளாக செயல்படும் மருத்துவர்களின் மத்தியில் டாக்டர் சாந்தாவின் இந்த குணங்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது.

1927ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நோபல் பரிசு பெற்ற சி வி ராமன் மற்றும் எஸ். சந்திரசேகரன் ஆகியோரின் பெருமை மிக்க குடும்பத்தில் இவர் பிறந்தார். 1955 ஏப்ரலில் தன்னுடைய வழிகாட்டி டாக்டர் எஸ் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனையை இவர் தொடங்கினார். அப்போது அவர் அந்த மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இந்த மருத்துவமனை தான் டாக்டர் சாந்தாவின் வீடாக இருக்கிறது. கடந்த வார இறுதியில் டாக்டர் சாந்தாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது, அதிக காலம் தான் உயிரோடு இருக்க போவதில்லை என்று.... உடனடியாக தன்னுடைய மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து அவர் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? ஒருவேளை நான் இறந்து விட்டால் என்னுடைய சாம்பலை இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை என்றார்.

94 வயதான இந்த மூத்த புற்றுநோய் மருத்துவரான சாந்தா கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார். இறப்பதற்கு முந்தைய நாளான திங்கட்கிழமை இரவு எட்டரை மணி வரை டாக்டர் சாந்தா மருத்துவமனையில் தனது வழக்கமான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தன்னுடைய சக மருத்துவர்களிடம் நோயாளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்தும், மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் தன்னுடைய உதவியாளருக்கு வேண்டிய அறிவுரைகளையும் அவர் வழங்கினார். அப்போது தான் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக அவர் தன்னுடைய உதவியாளர்களிடம் கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த போது ரத்தக் குழாய்களில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உயிரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் வேதனையுடன் கூறினார்.

இறந்த பின்னர் டாக்டர் சாந்தாவின் உடல் காந்திநகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையின் பழைய கட்டிட அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் உடலும் அதே இடத்தில் தான் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி இறந்த போது அவரது சாம்பலை மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் என்று டாக்டர் சாந்தா தான் விரும்பினார். அதே போல அப்போது செய்தோம். இப்போதும் டாக்டர் சாந்தாவின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது சாம்பலையும் மருத்துவமனை வளாகத்தில் தூவ தீர்மானித்துள்ளோம் என்கிறார் சாந்தாவின் சகோதரியும், மருத்துவமனை வாரிய உறுப்பினருமான சுசீலா. தன்னுடைய மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் தன்னலமற்ற சேவை புரிய வேண்டும் என்று அடிக்கடி அவர் கேட்டுக் கொள்வார். மருத்துவமனைக்கு தேவையான நிதி உதவியை பல நன்கொடையாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்று வந்தார். தனக்கு கிடைத்த வெகுமதிகள் அனைத்தையும் மருத்துவமனைக்காகவே இவர் செலவழித்தார் என்கிறார் அடையாறு மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவை சேர்ந்த டாக்டர் சுவாமிநாதன்.

புகையிலை மாபியாவுக்கு எதிராக டாக்டர் சாந்தா பெரும் போராட்டமே நடத்தினார். புகையிலை தான் புற்றுநோயின் முதல் எதிரி என்பதால் புகையிலை, பான் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இவர் பலமுறை கோரிக்கை விடுத்தார். சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார் என்கிறார் இந்த மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் விதுபாலா. மூன்று பத்ம விருதுகளும், ராமன் மகசேசே விருதும் பெற்றுள்ள டாக்டர் சாந்தாவை நோயாளிகள் ஒரு கடவுளாகவே கருதி வந்தனர். சாதாரண ஒரு காட்டன் சேலை அதன் மேல் ஒரு வெள்ளை கோட்டு அணிந்தபடி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடனும், அவர்களது உதவிக்கு வந்தவர்களிடமும் விவரங்களைக் கேட்டறிந்து அவருக்கு உற்சாகத்தையும் தெம்பையும் அளிப்பார். சாதாரண மருத்துவமனை ஊழியர்களிடம் கூட துளியும் கவுரவம் பார்க்காமல் பழகுவது இவரது மிகச்சிறந்த பண்பாகும். டாக்டர் சாந்தா இறந்துவிட்டார் என்பதை தங்களால் இன்னும் நம்ப முடியவில்லை என்று இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

You'r reading எனது சாம்பலை புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் இறப்பதற்கு முன் டாக்டர் சாந்தா கூறியது Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Special article News

அண்மைய செய்திகள்