இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது சின்ன வெங்காயத்தின் விலை. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தை உரிக்காமல் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று மட்டும் ஒரே நாளில் கிலோவிற்கு 20 ரூபாய் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது, நேற்றுவரை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 130 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் இன்று 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கலில் வெங்காயத்துக்கென்றே தனி சந்தை நடைபெறுவது வழக்கம் . திருப்பூர், தாராபுரம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், தேனி, கம்பம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விலையும் வெங்காயம் இந்த சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பெரு மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட வெங்காயம் அழுகி நாசமானது . இதன் காரணமாக உற்பத்தி குறைந்தது மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்தாலும் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.