தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் போல கேரளாவில் பினராயி விஜயனும் சாதிப்பாரா?

by Nishanth, Feb 17, 2021, 14:04 PM IST

கடந்த 2016 வரை ஆட்சிகள் வருவதில் தமிழகமும், கேரளாவும் ஒரே போலத் தான் இருந்தது. ஒரு முறை ஆட்சிக்கு வரும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த முறை ஆட்சி அமைக்காது. ஆனால் கடந்த 2016ல் இந்த வரலாற்றை ஜெயலலிதா திருத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்தார். அதே போலத் தான் இந்த முறை கேரளாவில் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியமைப்பார் என்று இடது முன்னணி தொண்டர்கள் தீவிரமாக நம்புகின்றனர்.கேரள மாநிலம் உருவாகி 1957ம் ஆண்டு அங்கு முதல் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது .

இதையடுத்து கேரளாவின் முதல் முதலமைச்சராக இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பொறுப்பேற்றார். அது தான் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசாகும். ஆனால் அடுத்த முறை கம்யூனிஸ்ட் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அடுத்த தேர்தலில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. பட்டம் ஏ.தாணு பிள்ளை கேரளாவின் 2வது முதல்வராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னர் 1962ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.

இதுவரை எந்தக் கூட்டணியும் தொடர்ந்து 2 முறை கேரளாவில் ஆட்சியில் இருந்தது கிடையாது. அந்த வரலாறு தான் கடந்த 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை ஆட்சி அமைத்த கட்சியோ, கூட்டணியோ அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது.கடந்த 1996 முதல் 2001 வரை இடது சாரி கூட்டணி கேரளாவில் ஆட்சியில் இருந்தது. அப்போது இ.கே.நாயனார் முதல்வராக இருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உற்சாகம் ஏற்பட்டது.இதன் மூலம் சட்டமன்ற தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்றும், தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்து விடலாம் என்றும் அக்கட்சியினர் தப்புக்கணக்கு போட்டனர்.

இதையடுத்து நான்கரை ஆண்டுகளிலேயே இ.கே.நாயனார் பதவியை ராஜினாமா செய்து தேர்தலைச் சந்திக்கப் போவதாக அறிவித்தார். அந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம் காரணமாகும். ஆனால் 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அது கேரளாவில் அனைத்து கட்சியினருக்கும் ஒரு பாடமாக அமைந்தது. ஆனால் இந்த முறை அந்த சரித்திரத்தை பினராயி விஜயன் மாற்றி எழுதுவார் என்று இடது முன்னணி தொண்டர்கள் மிகத் தீவிரமாக நம்புகின்றனர். 2001ம் ஆண்டு நடந்ததைப் போலவே இம்முறையும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியை கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மையாகும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை தங்கக் கடத்தல் வழக்கு, போதைப் பொருள் கடத்தலில் சிபிஎம் மாநில செயலாளரின் மகன் கைது செய்யப்பட்டது, தங்கக் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டது, முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த பலருக்குக் கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது, சில அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது என பல்வேறு புகார்களில் பினராயி விஜயன் அரசு சிக்கித் தவித்தது.அடுத்தடுத்து வந்த பல்வேறு புகார்களால் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி கிடைக்கும் என்றே கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதினர். ஆனால் அவர்களே எதிர்பாராதவிதமாக அந்த தேர்தலில் பெருவாரியான வார்டுகளில் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்ட பின்னரும் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி இடது முன்னணி தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என கம்யூனிஸ்ட் தோழர்கள் தீவிரமாக நம்புகின்றனர்.
கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைச் சமாளித்த விதம் மற்றும் கொரோனா காலத்தில் மேற்கொண்ட தீவிர நோய்த் தடுப்புப் பணிகள், கொரோனா காலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருள் கொடுத்தது, முதியோர் ஓய்வு ஊதியம் முறையாக வழங்கியது ஆகியவை தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்புகின்றனர். இதையடுத்து இலவச ரேஷன் பொருள் மற்றும் முதியோர் ஓய்வூதியத்தில் தீவிர கவனம் செலுத்தக் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்தது. முதலில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இலவச ரேஷன் பொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் நான்கு மாதங்களுக்கு இது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் காங்கிரஸ் சுத்தமாக நம்பவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியால் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது என்று காங்கிரசார் கூறுகின்றனர். உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த சில வருடங்களாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த உம்மன் சாண்டி, சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் மீண்டும் தீவிர அரசியலில் தற்போது ஈடுபட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எப்போதும் மக்களிடையே அதிக மவுசு இருக்கிறது. உம்மன் சாண்டி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தேர்தலைக் குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னித்தலா கடந்த சில தினங்களாகக் கேரளாவின் வடக்கு முனையில் இருந்து தெற்கை நோக்கி ஐஸ்வர்ய யாத்திரை என்ற பெயரில் ஒரு பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

இந்த பயணத்திற்குப் பெருமளவு கூட்டம் கூடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் கேரளாவில் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.இதற்கிடையே கடந்த சில நாட்களாகக் கேரளாவில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதி ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருவது பினராயி விஜயன் அரசுக்குச் சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வாணைய தேர்வு எழுதி வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு வேலை கொடுக்காமல் சொந்த கட்சியினருக்கு பின் வாசல் வழியாக வேலை கொடுப்பதாகக் கூறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த போராட்டத்தை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் கேரள அரசு தடுமாறி வருகிறது. வரும் தேர்தலில் இந்தப் பிரச்சினை மூலம் பினராயி விஜயன் அரசுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

You'r reading தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் போல கேரளாவில் பினராயி விஜயனும் சாதிப்பாரா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை