தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஐந்து நாளைக்கு இணைய சேவையை முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் இன்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. இதில் இன்று இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்திகள் பரவுவதால்தான் குழப்பம் நிலவுவதாக தமிழக உள்துறை அமைச்சகம் இணைய முடக்கத்தை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வருகிற 27-ம் தேதி வரையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்குவதாக தமிழக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.