விபத்துகளை தவிர்க்கும் வகையில், ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.
மலை உச்சியில் செல்பி.. கடலுக்கு நடுவில் செல்பி.. ரயில் முன்பு நின்று செல்பி.. எங்கும் செல்பி எதற்கெடுத்தாலும் செல்பி.. இந்த கலாசாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் விபத்துகள் பற்றி கவலைப்படாமல் நினைக்கும் இடத்தில் செல்பி எடுத்து உயிரையே விடும் சூழல் ஏற்படுகிறது. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தான் செல்பி எடுக்கும்போது அதிகளவில் இறக்கின்றனர் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கிறது. செல்பி கலாசாரம் ஒரு மனநோய் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ரயில் செல்லும் முன்பு நின்று கொண்டு செல்பி எடுப்பது, படிகட்டில் நின்றவாறு செல்பி எடுப்பது போன்ற உயிருக்கே ஆபத்து வரும் செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பலர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த கோர விபத்துகளை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரயில் நிலைய வளாகத்திற்குள் கண்ட இடத்தில் குப்பை போடுபவர்கள் மீது ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.