ஏன் வளர்ந்தேன் ?
- சாலை கடந்து முடிய
கோர்த்து சேர்ந்த விரல்கள் பிரிய
வஞ்சிக்கிறது இதயம்...
அப்பாவின் அதே பெரியவிரல் பிடிக்கும்
சிறிய கை கிடைக்காதாவென்று...!
- இரவெல்லாம் கதை கேட்க
தலையணையாய நீண்டிருந்த
அப்பாவின் அதே கரங்கள்
வாங்கிக் கொடுத்த
ஊமைத்தலையணைக்கு தெரியவில்லை..
என் செவிக்கு பசிக்குமென்று...!
- அறுசுவை உணவாயினும்
அரைதுவயல் ரசமாயினும்
நான் வைத்த மீதி உண்ணும்
அப்பாவின் அதே சிறிய பசிக்கு தெரியவில்லை
இன்றும் என் சோற்றுப் பருக்கைகள்
காத்திருக்குமென்று...!
- நான் வலிக்குமென்று
பலமுறை விலக்கிய
அப்பாவின் அதே தாடி மீசை முட்களுக்கு தெரியவில்லை
மீண்டும் ஒரு முறை
அதே முள் முத்தத்திற்காய்
என் கன்னங்கள் காத்திருக்குமென்று...!
- நான் தூங்க
பாடகனாய் மாறிய அப்பாவின்
அதே துயில் தாலாட்டுக்குத் தெரியவில்லை
அந்த பாடல்கள் தேடித் தோற்றுப்போய்
கண் விழித்தே போக்கின
பல ஜாமங்கள் எனக்கு உண்டென்று...!
தா. உதய கீர்த்திகா