கோவை என்றால் "அமைதியான ஊர், இயற்கை வளம், வளர்ச்சி அடைந்த தொழில் நகரம் என்ற அழகான வார்த்தைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்கும் ரவுடிகள் அதிகரித்துள்ளனராம்.
பொதுவாக சென்னையில், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க, ஊருக்கு பத்து பேரை வளர்த்து வைத்திருப்பார்கள், "இவர்கள்தான் சென்னையின் ரவுடிகள்" என்று எளிதில்அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு, பொதுமக்களுக்கும் நன்கு பரிட்சயமாக இருப்பார்கள். அதுபோல், கோயம்புத்தூரிலும் ரவுடிகள் அராஜகம் இருக்கிறதா என்றால், முற்றிலும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ரவுடிகளை பூதக்கண்ணாடி பயன்படுத்தி தேடித்தான் எடுக்க வேண்டும்.
இந்நிலையில், கோவை மாநகர பகுதிகளில் எத்தனை ரவுடிகள் இருக்கிறார்கள் என்று லிஸ்டு போட்டிருக்கிறார்கள் கோவை காவல்துறையினர். தொடர்ந்து கொலை, மற்றும் ஆள் கடத்தல் போன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். அதிகபட்சமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்படும் அந்த நபருக்கு வரலாற்று படிவம் (History sheet) தொடங்கப்படுகிறது. அப்படி, வரலாற்று படிவம் தொடங்கப்பட்ட நபரே போலீசாரால் ரவுடி என்று பெயரிடப்படுகிறார். அவ்வாறு கோவை மாநகர பகுதிகளில் மட்டும் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தற்போது வரை 535 பேரை ரவுடி லிஸ்ட்-ல் சேர்த்திருக்கிறது கோவை மாநகர காவல்துறை.
இந்த எண்ணிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “535 என்ற இந்த எண்ணிக்கை கடந்த 29 ஆண்டுகாலமாக கணக்கெடுக்கப்பட்டது. இதில் சிலர் மரணித்தும் இருக்கலாம், சிலர் மனம் திருந்தி தொழிலை விட்டும் இருக்கலாம், இன்னும் சிலர் சிறையிலும் இருக்கலாம்" என்றார்.
இதே போல பிக் பாக்கெட் போன்ற சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை ‘கேடி’ என்ற லிஸ்டில் இணைக்கின்றனர். ‘கேடி’ என்பது (KD- Known Delinquent). ஒருவரை செல்லமாய் திட்ட இந்த வார்த்தையை நம் மக்கள் அடிக்கடி உபயோகிப்பதை கேட்டிருப்போம். அதற்கு உண்மையான அர்த்தம் இது தான். இப்படி ரவுடி, கேடி, போன்று பல குற்றவாளிகள் கோவைக்குள்ளும் இருக்கிறார்கள் மக்களே. உஷாரா இருந்துக்கோங்க....!