தற்கொலைக்கு தூண்டும் மோமோ சவால்...பெற்றோர்கள் பீதி

Aug 6, 2018, 18:49 PM IST
ப்ளுவேலை தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டும் மோமோ விளையாட்டு சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி வருவதால் இந்திய பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டனர். ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலையும் செய்து கொண்டனர். இதையடுத்து, ஆபத்தை உணர்ந்து சர்வதேச நாடுகள் ப்ளுவேல் விளையாட்டை தடை செய்தன. 
 
ப்ளுவேல் விளையாட்டின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மோமோ சேலஞ்ச் என்ற புதிய ஆபத்து, இளம் தலைமுறையினரை குறிவைத்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், மெஸ்சேஞ்சர், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் மோமோ சவால்கள் உலக முழுவதும் பரவியுள்ளது. 
 
இந்த சவாலில் பங்கேற்க, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் மோமோ என்ற எண்ணை சேமித்து, அதற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். வெள்ளை தோலுடன் வீங்கிய கண்களுடன் கொடூரமாக சிரிக்கும் வகையில் உள்ள உருவத்திற்கு பெயர் தான் மோமோ. இவள் நம் மனநிலையை பாதிக்கும் தன்மை கொண்டவள்.
எந்நேரத்திலும் திடீரென ஸ்மார்ட்ஃபோன் திரையில் தோன்றும் மோமோ, சவாலில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கும். முதலில் விசித்திரமான மற்றும் அவலட்சணமான சிலை, ஓவியம் நிறைந்த புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, ப்ளுவேல் சேலஞ்சைப் போல, முதலில் சிறிய சிறிய சேலஞ்ச்களை செய்ய வைக்கிறது.  
 
மோமோவுடன் விளையாடுவதால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வன்முறை மற்றும் தற்கொலை செய்ய தூண்டும். பணம் பறிப்பும் செய்யும். மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா என்று தூக்கமின்மை நோய் உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்க கூடும்.
 
இந்த விளையாட்டின் ஆபத்தை அறிந்து, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல , வாட்ஸ் ஆப் நிறுவனமும், இது போன்ற  ஆபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது. 
 
மோமோ விளையாட்டால், இந்தியா குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என பீதியில் உறைந்துள்ள பெற்றோர்கள், அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

You'r reading தற்கொலைக்கு தூண்டும் மோமோ சவால்...பெற்றோர்கள் பீதி Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை