கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அசதியில் கண்ணயர்வதால் எத்தனையோ விபத்துகள் நேருகின்றன. கார் இருக்கையில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ஓட்டுபவரின் மூளையில் உள்ள மின்னதிர்வுகளை கணக்கிட்டு, அசதியாக, தூக்க கலக்கத்தில் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி - மெட்ராஸ்) கண்டுபிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 33,026 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவ்விபத்துகளில் 6,510 பேர் பலியாகியுள்ளனர். 3,044 பேர் படுகாயமுற்றுள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
ஐஐடியின் இந்த ஆய்வு வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் என்ற பேராசிரியரின் வழிகாட்டலில் நடந்துள்ளது. "மனிதனின் மூளை செயல்பாட்டை ஈஈஜி என்னும் எலெக்ட்ரோஎன்சல்ஃபோகிராம் (electroencephalogram - EEG) என்ற முறையை பயன்படுத்தி அறிய முடியும்.
மனிதன் விழிப்புடன் இருக்கும் நிலை மற்றும் அசந்திருக்கும் நிலை இரண்டின்போதும் மூளையின் செயல்பாட்டில் பெரிய வித்தியாசம் தெரியும். ஈஈஜியின் போது மனிதனின் உடலில் பொருத்தப்படும் கருவிகள் இல்லாத சிஈசிஜி (contact-free cECG) என்ற முறையை பயன்படுத்தி காரை ஓட்டுபவரின் மூளையின் செயல்பாட்டை படிக்க முடியும்," என்று தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு எல்ஸ்வியர் நிறுவனம் பதிப்பித்துள்ள போக்குவரத்து ஆராய்ச்சிக்கான அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடியின் ஆர்பிஜி ஆய்வகத்தில் நடந்த இந்த ஆய்வில் 35 பேர் தன்னார்வலராக கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரம் ஆய்வை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கருவியை பயன்படுத்தி கணக்கிடுவதை கொண்டு இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிப்பான் ஓட்டுநரை எச்சரிக்கும் என்று கூறப்படுகிறது.
"வேகத்திற்கு அடுத்தபடியாக ஓட்டுநரின் அசதியும் விபத்துகள் நேர்வதற்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது. இது போன்ற தொழில்நுட்பத்தை கார் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தி, ஓட்டுநரை எச்சரிக்கை செய்வதோடு, அருகிலிருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் வாகனத்தை நிறுத்த தகுந்த ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்க வேண்டும்," என்று தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஆலோசகர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
விபத்துகள் குறைவதோடு உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.