சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து இன்று மாலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிகள், தோழமைக் கட்சித் தலைவர்கள் என அனைவரிடமும் வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினுடன் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பொருளாளர் துரைமுருகன் மேடையில் நின்றிருந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நின்றபடியே ஸ்டாலின் தொண்டர்கள் வாழ்த்து பெற்றார். மேலும் தோழமை கட்சி தலைவர்களான திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொண்டர்களை சந்தித்த பின்னர் கலைஞர் அரங்கத்தில் இருந்து நடந்து அறிவாலய கட்டடத்தில் அமைந்துள்ள தலைவர் அறைக்கு ஸ்டாலின் சென்றார். முதல் முறையாக தலைவர் இருக்கையில் அமர்ந்து தலைவர் என்கிற முறையில் ஒருசில கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச்சென்றார்.