உலக உணவு நாள் அக்டோபர் 16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தும்படியாய் 3,000 கிலோ கிச்சடி கிண்டப்பட்டது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர். இவர் நாக்பூரில் கடந்த ஞாயிறன்று ஒரே பாத்திரத்தில் கிச்சடி சமைத்து கின்னஸ் சாதனை செய்ய முயன்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஞ்சீவ் கபூர் என்னும் சமையல் கலைஞர் புதுடெல்லியில் 918 கிலோ கிராம் கிச்சடி சமைத்தது 'அதிகமானோருக்கு சமைக்கப்பட்ட சாதமும் பீன்ஸூம்' என்ற பிரிவில் கின்னஸ் சாதனையாக இடம் பெற்றது.
"கிச்சடி குறைந்த செலவில் சமைத்து அனைவரும் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவு. கிச்சடி நமது தேசிய உணவாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வே இந்த முயற்சியை ஊக்குவித்தது," என்று மனோகர் தெரிவித்துள்ளார். 275 கிலோ அரிசி, 125 கிலோ பாசி பருப்பு, 150 கிலோ கடலை பருப்பு, 3,000 லிட்டர் தண்ணீர் மற்றும் 150 கிலோ நெய் ஆகியவற்றை பயன்படுத்தி மனோகர் கிச்சடி கிண்டியுள்ளார்.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமையல் கலைஞர் விஷ்ணு மனோகரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
"விஷ்ணு மனோகர் பிரபலமான சமையல் கலைஞர். இந்த சாதனைக்காக அவரை பாராட்டுகிறேன். இந்திய உணவு ஒன்றினை உலக அளவில் பிரபலமாக்குவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மசாலா கிச்சடி அதிக சுவையாக இருக்கிறது," என்று கட்கரி கூறியுள்ளார்.