காவியத் தாயின் இளையமகன் கவிஞர் கண்ணதாசனின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை! என்ற வரலாற்று வரிகளை உலகில் பதியவைத்து இன்றும் என்றும் தன்னை நினைக்க வைத்துக் கொண்டிருக்கும் மா கவிஞர் கண்ணதாசன்.
1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி காரைக்குடியின் சிறுகூடல்பட்டியில் முத்தையாவாக பிறந்தவர். கடவுள் கண்ணனின் மீது கொண்ட பற்றின் காரணமாக கண்ணதாசனாக மாறினார்.
வாலிப கவிஞர் வாலி அவர்கள், பட வாய்ப்புகள் கிடைக்காமல் சோர்ந்துபோய் ஊருக்கே சென்றுவிடலாம் என்று கிளம்பிய போது கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் அவரை நம்பிக்கை ஊட்டி மீண்டும் தனது முயற்சியை தொடர வைத்தது என பல பேட்டிகளில் வாலி குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல் மயக்கமா கலக்கமா , மனதிலே குழப்பமா என்ற பாடலாகும்.
பின்னர் வாலி உயர்ந்த கதை தமிழ்சினிமா அறிந்த ஒன்றே. இப்படி இன்னொரு கவிஞரை உருவாக்கிய மகா கவிஞராக திகழ்ந்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசனுக்கு இன்னொரு சிறப்பு தத்துவப்பாடல்களை யார் எழுதியிருந்தாலும் மக்கள் அதை கண்ணதாசன் எழுதியதாகவே கருதினார்கள். இது பற்றி கவிஞர் வாலியே ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அது எம்ஜிஆர் படத்திற்காக வாலி எழுதிய பாடல் ஒன்று கண்போன போக்கிலே கால் போகலாமா என்ற பாடல் . அந்த பாடலை கண்ணதாசன் எழுதினார் என்று மனோரமா மேடையிலே பாராட்டினாராம். பிறகு வாலி போன் போட்டு அது நான் எழுதியது என்று விளக்கினாராம்.
பின்னர் காலப்போக்கில் தனது பல பாடல்களை கண்ணதாசன் எழுதியது என்றே மக்கள் எண்ணினார்கள், தத்துவப்பாடல் என்றால் அவர்தான் எழுதுவார்கள் என்று நம்பினார்கள் அது எனக்கும் பெருமை தான் என்று பின்னாளில் வாலி குறிப்பிட்டுள்ளார். இதற்கு இன்னொரு உதாரணம் திருவிளையாடல் படத்தில் வரும் பார்த்தா பசுமரம் படுத்துகிட்டா நெடுமரம் பாடல். அது கவி க.மு.ஷரிப் எழுதிய பாடல். ஆனால் கண்ணதாசன் எழுதியதாகத்தான் அனைவரும் நம்பினர்.
மனிதன் மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை , போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே போன்ற தத்துவ பாடல்கள். பறவையை கண்டான் விமானம் படைத்தான், எதனை கண்டான் மதம் தனை படைத்தான் என்ற சமுதாய கோபத்தை ஆரம்பத்தில் திராவிட கட்சியில் இருந்த போது எழுதிய கண்ணதாசன் 1961 க்கு பிறகு திமுகவிலிருந்து விலகினார்.
காலம் கடந்து நிற்கும் பாடல் வரிகளால் நிரந்தரமாக அழிவில்லாமல்தான் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் அனைவருடனும் பழகியவர் கண்ணதாசன். பாடல் மட்டுமல்ல பல நாவல்களை, காவியங்களை படைத்துள்ளார்.
அர்த்தமுள்ள இந்து மதம் அருமையான படைப்பு இதுபோல் எண்ணற்ற நூல்களை எழுதிய கண்ணதாசன் சொந்தமாக தென்றல் என்ற பத்திரிகையும் நடத்தினார். சேரமான் காதலி என்ற வரலாற்று நூலுக்கு சாகித்ய அகடாமி விருதும் கிடைத்தது.
என்றுமே அழிவில்லாமல் மக்கள் நெஞ்சில் வாழும் மகத்துவம் நிறைந்த கவியரசர் கண்ணதாசனை காலம் உள்ளவரை கலையுலகம் போற்றும்!