அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸி.அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸி.அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதம் கடந்து 131 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சீராக ரன் சேர்த்தது.
கேப்டன் கோஹ்லி அபாரமாக ஆடி சதம் அடித்தார். 104 ரன்களில் கோஹ்லி ஆட்டமிழக்க கடைசிக் கட்டத்தில் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் தினேஷ் கார்த்திக்கும் அபாரமாக ஆடி வெற்றி தேடித் தந்தனர். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் அபார சிக்ஸரும் அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுத்து பினிசிங் செய்தார் தோனி . 49.2 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தோனி 55 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி தொடரில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் கடும் பலப்பரீட்சை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.