இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரேட்டிங் எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இருநாடுகளிலும் உள்ள தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் டிவி முன்பு அமர்ந்துவிடுவது வழக்கம். அதுவும் உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்த போட்டிகளின் போது இரு அணிகளுக்கும் இடையே அனல் பறக்கும். அதேவேளையில் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இதுவரை சங்கடமே நிகழ்ந்துள்ளது. கடந்த 6 உலகக்கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. மற்ற நேரங்களில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தாலும் உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் பாகிஸ்தானுக்கு துரதிர்ஷ்டம் துரத்தி விடுகிறது.
இதற்கிடையே இந்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. இதிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்ளவுள்ளன. ஜூன் 16-ம் தேதி ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்தப் போட்டியை வென்று வரலாறை மாற்றியமைப்போம் என அறைகூவல் விடுக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின்கான். இதுகுறித்து அவர் கூறுகையில், ``உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்ற அவப்பெயரை விரைவில் நீக்குவோம். வரும் உலகக்கோப்பையில் புதிய வரலாறு படைப்போம். இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு, துணிச்சலாக எதிர்கொள்ளும் அளவுக்கு நம்பிக்கையான, திறமையான வீரர்கள் தற்போது எங்களிடம் உள்ளனர்.
இதை எப்படி உறுதியாக கூறுகிறேன் என்றால், கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை எங்கள் வீரர்கள் தோற்கடித்தார்கள். அந்த நம்பிக்கை போதும். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் காலநிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மட்டுமே இங்கிலாந்தில் ஜூன் மாதம் நிலவும் ஈரப்பதமான பருவநிலைக்கு ஏற்றார்போல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அதுபோல் எங்களிடம் திறமையான வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் இருப்பதால், அங்குள்ள பருவநிலையைப் புரிந்துகொண்டு பந்துவீச எங்களால் முடியும். இதனால் தான் இந்தியாவை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.