ஆஸ்திரேலிய அணி வரும் 24ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அனைத்து மூன்று தொடர்களையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தநிலையில் ஆஸ்திரேலியா இந்தியா வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்திலும், 2-வது போட்டி பெங்களூருவிலும் நடக்கிறது.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தோனி, ரோஹித், தவான் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் நிறைய பேர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக ஒரு சில மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேநேரம் டி20 போட்டிகளில் அறிமுக வீரராக மாயங் மார்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர். அதேபோல் ஒருநாள் போட்டிக்கான அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கழட்டிவிடப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்:
டி20 போட்டி: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, விஜய் சங்கர், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் மற்றும் மயங்க் மார்க்கண்டே
முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பன்ட், சித்தார்த் கவுல் மற்றும் கே.எல்.ராகுல்
கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி விஜய் சங்கர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பன்ட்.