பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 வெலிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் பந்துவீச தீர்மானித்தது. இதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள மட்டுமே குவித்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக பாபர் ஆசம் 43 ரன்களையும், ஹசன் அலி 23 ரன்களையும் எடுத்தனர். மேலும், இந்த இருவர் மட்டுமே இரட்ட இலக்கத்தையே தொட்டனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணி 53 ரன்களுக்குள் ஃபஹர் ஜமான், உமர் அமின், மொஹமது நவாஸ், ஹரிஷ் ஷொகைல், கேப்டன் சர்ப்ராஷ் அஹமது ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 53 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் பாபர் ஆசம், ஹசன் அலி ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் தான் 100 ரன்களையே தொட்டது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியும் 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொலின் மன்றோ கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு துணையாக டாம் புரூஸ் 26 ரன்களும், ராஸ் டெய்லர் 23 ரன்களும் எடுத்தனர்.