கடந்தாண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு சென்னை கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் முதல் பிரபல நடிகர்கள் பலர் பேசிய பிரபல பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். தமிழக இளைஞர் ஒருவர் மூலம் இந்தப் பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சென்று தமிழில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இதற்கிடையே, இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் அதில் இரண்டு ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளார். உச்ச கட்ட பார்மில் இருக்கும் அவர் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வந்தாலும் அதற்கு முன்பாக மும்பை அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்தார். மூன்று முறை மும்பை கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், ஹர்பஜன் மும்பை - சென்னை அணிகளில் எது பெஸ்ட் என்பது குறித்து பதிலளித்துள்ளார்.
அதில், ``மும்பை அணி மீது நான் பெரிய மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் வழக்கம்போல இந்தாண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அந்த அணியில் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் நின் நிறையவே இருக்கும். ஆனால், சி.எஸ்.கேவில் அப்படியல்ல. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனநிலை கொண்டது சி.எஸ்.கே. இங்கு வெற்றி என்பது வாழ்வா சாவா பிரச்னை இல்லை” எனப் பேசியுள்ளார்.