பஞ்சாப் உடையில் இருந்தாலும் நான் எப்போதும் தமிழன் தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் பேராதரவுடன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
2018-ஆம் ஆண்டின் 11-ஆவது சீசனுக்கான ஏலத்தில் சென்னை அணியின் உள்ளூர் நாயகனாக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் தக்கவைக்கவும் இல்லை, ஏலத்தின் போதும் எடுக்கவும் இல்லை.
இந்நிலையில், ஏலத்தின் போது அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. இதனால் சென்னை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், “ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி என்னை எடுக்காதது கொஞ்சம் வேதனையாகத் தான் உள்ளது. சேப்பாக்க மைதானத்தின் ஒவ்வொரு பக்கத்தில் ஒலிக்கும் ஆக்ரோஷமான உற்சாக குரல், என் செவிகளில் இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் காலத்தின் மாற்றத்தால் தான் இம்முறை பஞ்சாப் அணிக்காக களமிறங்குகிறேன். பஞ்சாப் உடையில் இருந்தாலும் நான் எப்போதும் தமிழன் தான்” என்று உணர்ச்சி பொங்க அஸ்வின் கூறினார்.